ஆம், குறைகளும் நமக்கு ஒரு வகையில் கொடைகள்தாம். குறைகளையும் நிறைகளாக மாற்றும் சக்தி நம் ஒவ்வொருவரிடமும் உள்ளது. ஆனால் நாம்தான் அதை கண்டு கொள்வதில்லை.
பல ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க ஐக்கிய நாட்டின் டெக்சஸ் (Texas) மாநில நீதி மன்றத்தில் நடைபெற்ற ஒரு வழக்கு.. விசாரணைக்கு வந்தது. கைகளும், கால்களும் இல்லாத நிலையில் வாழ்ந்து வந்த ஒரு தாய், தன் 5 மாதக் குழந்தையைக் காப்பாற்ற முடியாது என்று அம்மாநில அரசு தீர்மானம் செய்தது.
தன்னால் முடியும் என்று நிரூபிக்க, அந்தத் தாய் நீதிமன்றத்தை நாடினார்.வழக்கு ஆரம்பமானதும், அந்தத்தாய் நீதிமன்றத்தில் செய்தது, அனைவரையும் ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கைகளும், கால்களும் இல்லாத அந்தத் தாய், தன் உதடுகள், நாவு இவற்றின் உதவியுடன், அவருக்கு முன் படுத்திருந்த குழந்தையின் துணிகளைக் கழற்றி, மீண்டும் புதுத் துணியை மாட்டி விட்டார். குழந்தைக்குத் தேவையான உணவை ஊட்டி விட்டார்.இதைக் கண்ட நீதிபதி,தன் இருக்கையை விட்டு எழுந்து நின்று, அந்தத் தாயை வணங்கினார்.பின்னர் அவர், "திறமைகளை உடல் அளவில் பெற்றிருப்பது, உண்மையின் ஒரு சிறு பகுதிதான் உள்ளத்தில் பெற்றிருக்கும் உறுதியே, உண்மையான திறமை என்பதை, எங்கள் அனைவருக்கும் உணர்த்திய உங்களுக்கு நன்றி" என்று கூறினார்.
குறைகளும், நிறைகளும் அனைவரிடம் இருக்கத்தான் செய்கிறது. நமது குறைகளை பெரிதுபடுத்தினால் அவையே அதிகமாய் நம் மனதில் தங்கு கின்றன.
எனவே, நமது குறைகளை பொருட்படுத்தாமலும்,அதை எண்ணி கவலைப் படாமலும் துணிந்து செயல்பட வேண்டும். கடவுள் ஒரு குறைய படைத்தாலும் அதை விட வேறு ஒரு திறமையை நிச்சயமாக வைத்திருப்பார். ஓடுங்கள் தேடுங்கள் கண்டுப்பிடிங்கள் உங்கள் திறமையை வெளிக்கொணருங்கள்.