திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள் கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது என்பதால், பெற்றோர்களும், மாணவர்கள் அச்சப்பட வேண்டாம் என, தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில், பொதுத் தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, கடந்த ஜனவரி மாதம் நடைபெறவிருந்த திருப்புதல் தேர்வு, கொரோனா பரவல் காரணமாக, பிப்ரவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. கடந்த 9 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் திருப்புதல் தேர்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள் சமூக வலைதளங்களில் லீக் ஆனது. இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Join Our Social media
Watsapp : TI News Watsapp
Telegram : TI News Telegram
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியானது விசாரணையில் தெரிய வந்தது. இதை அடுத்து, இதற்கு காரணமான அந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள் செல்வத்தை பணியிடை நீக்கம் செய்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. இதற்குள், நாளை நடைபெறவிருந்த 12 ஆம் வகுப்பு இயற்பியல் திருப்புதல் தேர்வு வினாத்தாளும் சமூக வலைதளங்களில் வெளியாகியது. அடுத்தடுத்து வினாத்தாள்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருவது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இன்று, தமிழக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள் கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது. இதனால், பெற்றோர்களும், மாணவர்கள் அச்சப்பட வேண்டாம். மாணவர்களை பொதுத் தேர்வு எழுதுவதற்கு தயார்படுத்தவே திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது. அடுத்த மாதமும் ஒரு திருப்புதல் தேர்வு மாணவர்களுக்கு நடத்தப்பட உள்ளது.
மூன்று மணி நேரம் மாணவர்கள் தேர்வு எழுத பயிற்சி பெற வேண்டும் என்பதற்காகவே திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது. பாதுகாப்பான முறையில் இந்தாண்டு பொதுத் தேர்வு நடைபெறும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.