2023-24ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் - பள்ளி மாணவர்கள் பெயர்ப் பட்டியல் EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல்

2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிப்பதற்கு. EMIS-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர்களின் கீழ்க்காணும் தகவல்கள் வழங்கப்பட உள்ளன.

1. மாணாக்கரின் பெயர் (தமிழ் மற்றும் ஆங்கிலம்)

2. பிறந்த தேதி

3. புகைப்படம் (jpeg jpg)

4. பாலினம்

5. வகைப்பாடு (சாதி அடிப்படையிலான வகைப்பாடு)

6. மதம்

7. மாணாக்கரின் பெற்றோர்/பாதுகாவலர் பெயர் (தமிழ் மற்றும் ஆங்கிலம்)

8. மாற்றுத் திறனாளிவகை மற்றும் சலுகைகள்

9. கைபேசி எண்

10. பாடத் தொகுப்பு- Group code (1 மாணவர்களுக்கு மட்டும்)

11.பயிற்று மொழி (Medium of instruction)

12 மாணாக்கரின் வீட்டு முகவரி

13.பெற்றோரின் ஆண்டுவருமானம்

பள்ளி மாணவர்களின் மேற்குறிப்பிட்ட தகவல்களைப் பயன்படுத்தியே. 2023 - 2024 - ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்பட உள்ளதால், அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும், 16.11.2023 முதல் 30:112023 வரையிலான நாட்களில் EMIS-ல் தங்களூக்கு வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password- ஐ பயன்படுத்தி, EMIS Portal-ல் சென்று தங்களது பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களது மேற்குறிப்பிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா என்பதனையும், மாணவரின் பெயர். பிறந்ததேதி, புகைப்படம் மற்றும் பாடத்தொகுப்பு ஆகிய விவரங்கள் பின்வருமாறு உள்ளதா என்பதனையும் சரிபார்த்து, திருத்தங்கள் இருப்பின் உடன் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். EMIS Portal-ல் உள்ள மாணவரது பெயர் / பெற்றோரது பெயர் உள்ளிட்ட தமிழில் உள்ள விவரங்கள் அனைத்தும் UNICODE Font - ல் மட்டுமே இருத்தல் வேண்டும். வேறு ஏதேனும் தமிழ் Font - ல் விவரங்கள் இருந்தால் அதனை முழுமையாக நீக்கம் (Delete) செய்து விட்டு UNICODE Font-ல் மீண்டும் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு


1. மாணவரின் பெயர் (ஆங்கிலம் மற்றும் தமிழ்)

மாணவரது பெயர் பிறப்புச் சான்றிதழில் உள்ளவாறே இருத்தல் வேண்டும். பெயர் முதலிலும், அதனைத் தொடர்ந்து தலைப்பெழுத்தும் இடம்பெறும் வகையில் மாணவரது பெயர் இருக்க வேண்டும். பெயருக்கும் தலைப்பெழுத்துக்கும் இடையில் (Between name and initial) ஒரு இலக்க இடைவெளி மட்டுமே இருத்தல் வேண்டும் (புள்ளி வைத்தல் கூடாது). இரு தலைப்பெழுத்துக்கள் இருப்பின் இரு தலைப்பெழுத்துக்களுக்குமிடையே ஒரு இலக்க இடைவெளி மட்டுமே இருத்தல் வேண்டும். மாணவரது பெயரை தமிழில் பதிவேற்றம் செய்யும் போது தலைப்பெழுத்தும் தமிழில் இருக்க வேண்டும். உதாரணமாக, மாணவரது தந்தையின் பெயர் கண்ணன் எனில், தலைப்பெழுத்து க என இருக்க வேண்டும். அரசிதழில் பெயர் மாற்றம் செய்தவர்களுக்கு மட்டுமே அரசிதழின் நகலைப் பெற்று அதன் அடிப்படையில் பெயர் மாற்றம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

2. பிறந்த தேதி

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினைப் பொறுத்தவரை, மாணவரின் பிறந்த தேதியினை பிறப்புச் சான்றிதழுடன் ஒப்பிட்டு சரிபார்த்த பின்னரே பதிய வேண்டும்.

மாணவர்கள் தேர்வு நடைபெறும் மாதத்தின் முதல் நாளன்று அன்று கண்டிப்பாக 14 வயது நிறைவு செய்தவர்களாக இருத்தல் வேண்டும். அவ்வாறு 14 வயதினை நிறைவு செய்யாதவர்களாக இருப்பின், மாணவர்களது வயது தளர்வு அரசாணையின்படி, சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்/ முதன்மைக் கல்வி அலுவலரிடம் கண்டிப்பாக வயது தளர்விற்கான (Age relaxation) ஒப்புதல் பெற்றிருக்கவேண்டும். மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னர், பிறந்த தேதி மாற்றம் கோருவோரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது.

3. புகைப்படம்

சமீபத்தில் எடுக்கப்பட்ட மாணவரது மார்பளவு புகைப்படத்தை (Passport size photo) மட்டுமே பதிவேற்றம் செய்யவேண்டும். பதிவேற்றம் செய்யப்படும் புகைப்படம் (jpeg, jpg வடிவில் இருக்க வேண்டும்.

4. மாணவரது பெற்றோர்/ பாதுகாவலர் பெயர் (ஆங்கிலம் மற்றும் தமிழ்)

மாணவர்களது பெற்றோர் (தாய் மற்றும் தந்தை) / பாதுகாவலரது பெயர்களை, அவர்களது பள்ளி ஆவணங்கள் /ஆதார் அட்டையில் உள்ளவாறு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தவறில்லாமல் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.

5. கைபேசி எண்

தேர்வு முடிவுகள் மாணவரது பெற்றோரது / பாதுகாவலரது கைபேசி எண்ணுக்கே குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்பதால், பதிவேற்றம் செய்யப்படும் கைபேசி எண் சரியானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

6. பயிற்று மொழி

பள்ளித் தலைமையாசிரியர்கள் EMIS Portal-ல் தங்கள் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர் 1 முதல் 10 வரையிலான வகுப்பு ஒவ்வொன்றையும் எந்த பயிற்று மொழியில் பயின்றார் என்ற விவரத்தினை தனித்தனியே பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.


குறிப்பு:

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் அனைத்து தேர்வர்களும் பகுதி - 1 -ல் தமிழ் மொழியை மட்டுமே மொழிப்பாடமாக தேர்வெழுத அனுமதிக்கப்படுவர்.

தமிழகத்திலே பிற பாடத்திட்டத்தில் உதாரணத்திற்கு சி.பி.எஸ்.இ மற்றும் ஐ.சி.எஸ்.இ போன்ற பாடத்திட்டத்தில் பயின்று தமிழ் மாநிலப் பாடத்திட்டத்திற்கு (State Board) நேரடியாக 9 ஆம் வகுப்பு 10 ஆம் வகுப்பில் சேர்கின்ற மாணவர்களுக்கு மட்டும் அரசாணை (நிலை) எண். 37, பள்ளிக் கல்வித் (க ஆ ப) துறை, நாள்.06.03.2018 -ன்படி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பகுதி - 1 இல் தமிழ் மொழிப்பாடம் எழுதுவதிலிருந்து 2023 - 2024-ம் கல்வியாண்டு வரையில் விலக்களிக்கப்பட்டுள்ளது.

மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு

1. மாணவரின் பெயர் (ஆங்கிலம் மற்றும் தமிழ்) மற்றும் பிறந்த தேதி

மேல்நிலை முதலாமாண்டு பயிலும் மாணவர்களிடமிருந்து பெற்ற பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழின் நகலின் அடிப்படையிலேயே மாணவர்களது பெயர் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய பின் அரசிதழில் பெயர் மாற்றம் செய்தவர்களுக்கு மட்டும் அரசிதழின் நகலைப் பெற்று அதன் அடிப்படையில் பெயர் மாற்றம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
தேர்வர்கள் 01/03/2024 அன்று 15 வயது நிறைவு செய்தவர்களாக இருத்தல் வேண்டும். பத்தாம் வகுப்பு சான்றிதழில் இருப்பது போன்று மாணவரின் பெயர் மற்றும் பிறந்த தேதி இல்லாமல் தவறாக இருப்பது பின்னர் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

2. புகைப்படம்

சமீபத்தில் எடுக்கப்பட்ட மாணவரது மார்பளவு புகைப்படத்தை (Passport size photo) மட்டுமே பதிவேற்றம் செய்யவேண்டும். பதிவேற்றம் செய்யப்படும் புகைப்படம் (jpge, jpg) வடிவில் இருக்க வேண்டும்.

3. மாணவரது பெற்றோர் / பாதுகாவலர் பெயர் (ஆங்கிலம் மற்றும் தமிழ்)

மாணவர்களது பெற்றோர் (தாய் மற்றும் தந்தை) / பாதுகாவலரது பெயர் மாணவரது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் உள்ளவாறே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தவறில்லாமல் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.

4. கைபேசி எண்

தேர்வு முடிவுகள் மாணவரது பெற்றோரது / பாதுகாவலரது கைபேசி எண்ணுக்கே குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்பதால் பதிவேற்றம் செய்யப்படும் கைபேசி எண் சரியானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

5. பாடத்தொகுப்பு

மேல்நிலை முதலாமாண்டு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்தின்படி, ஒவ்வொரு பாடத்தொகுப்பிற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பாடத்தொகுப்பு எண்ணை மட்டுமே குறிப்பிடவேண்டும்.

குறிப்பு:

பள்ளித் தலைமையாசிரியர்கள், தங்கள் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களின் அனைத்து விவரங்களையும் EMIS Portal-ல் சென்று சரிபார்த்து, திருத்தங்கள் இருப்பின் திருத்தம் செய்யும் பணியினையும் மேற்குறிப்பிட்டுள்ள நாட்களிலேயே மேற்கொள்ளுதல் வேண்டும்.
மேலும், பள்ளியின் பெயரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரியாக EMIS Portal-ல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பெயர்ப் பட்டியலின் அடிப்படையிலேயே மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்படும் என்பதால், இப்பணியினை தலைமையாசிரியர் தமது நேரடி கவனத்தில் மிகுந்த பொறுப்புடனும், சிரத்தையுடனும் மேற்கொள்ள வேண்டும். பதிவேற்றம் செய்யப்பட்ட மாணாக்கரின் விவரங்களில் தவறுகள் ஏதும் ஏற்படின் சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர் மற்றும் பள்ளித் தலைமையாசிரியரே முழுப் பொறுப்பேற்க நேரிடும்.
தேர்வர்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழின் அடிப்படையில்தான் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. எனவே, பத்தாம் வகுப்பு சான்றிதழில் தேர்வரின் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தேர்வரின் பெற்றோரின் முன்னிலையில் உரிய படிவத்தில் தயார்செய்து கையொப்பம் பெறுதல் வேண்டும்.
எக்காரணத்தைக் கொண்டும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய பின்னர் திருத்தங்கள் கோரி தேர்வுத்துறைக்கு அனுப்பக்கூடாது என்பதும் வலியுறுத்தி தெரிவிக்கப்படுகிறது.மேலும், மேற்குறிப்பிட்டவாறு பதிவேற்றம் செய்த மாணவர்களின் விவரங்களின் அடிப்படையில் இடைநிலை மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான பெயர்ப்பட்டியல் தயாரித்தல் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்துதல் போன்ற பணிகளை அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் மேற்கொள்வதற்கான தேதிகள் குறித்த விவரம் பின்னர் தெரிவிக்கப்படும்.
Previous Post Next Post

نموذج الاتصال