கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு 10 ரன்கள் தேவை. முரட்டுத்தனமான ஃபார்மில் இருந்த கேப்டன் மேத்யூ வேட் ஸ்ட்ரைக்கில் இருந்தார். ஏற்கெனவே 3ஓவர்கள் வீசி 37 ரன்கள் கொடுத்த அர்ஷ்தீப் சிங்கை கடைசி ஓவரை வீச சூர்யகுமார் அழைக்க ரசிகர்கள் "உஷ்ஷ்ஷ்" என்று சத்தமிட்டனர்.
ஆனால், யாரும் எதிர்பாராத அதிசயம் அங்கு நிகழ்ந்தது.எந்தவிதமான பதற்றமும், அச்சமும் இன்றி பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் முதல் இரு பந்துகளை யார்கர்க்ளாகவீசி வீசி மேத்யூ வேடுக்கு நெருக்கடியளித்தார். 3ஆவது பந்தை அர்ஷ்தீப் யார்க்கராக வீசும் முயற்சி தோல்வி அடையவே அதை லாங்-ஆன் திசையில் மேத்யூ வேட் தூக்கி அடிக்க ஸ்ரேயாஸிடம் கேட்சானதும் ரசிகர்கள் உற்சாகத்தில் கோஷமிட்டனர்.
அடுத்து வந்த பெரன்டார்ப் ஒரு ரன்னும், எல்லீஸ் ஒரு ரன்னும், கடைசிப் பந்தில் பெரன்டார்ப் ஒரு ரன்னும் எடுக்க இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
பெங்களூர் ஆடுகளத்தின் சிறப்பு என்ன?
பெங்களூரு சின்னசாமி ஆடுகளத்தில் 2023ம் ஆண்டில் இதுவரை நடந்த 7 சர்வதேச டி20 போட்டிகளில் முதலில் பேட் செய்த அணி ஒருமுறை மட்டுமே வென்றுள்ளது. அதிலும் இந்த மைதானத்தில் 190 ரன்கள் அடித்தால்கூட அது பாதுகாப்பில்லாத ஸ்கோர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், அனைத்து கணிப்புகளையும் மாற்றி இந்திய அணி 160 ரன்கள் மட்டுமே சேர்த்து அதையும் டிபெண்ட் செய்து ஆஸ்திரேலிய அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்று கோப்பையைக் கைப்பற்றியது.சூர்யகுமார் தலைமையில் இந்திய அணிக்கு கிடைத்த முதல் தொடர் வெற்றியாகும்.
இதற்கு முன் கடைசியாக 2017ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி 139 ரன்கள் சேர்த்து, ஆர்சிபி அணியை 119 ரன்களில் சுருட்டி வெற்றி பெற்றதே கடைசியாக குறைந்த ஸ்கோரில் டிபெண்ட் செய்யப்பட்டதாகும். அதன்பின் இப்போது இந்திய அணி டிபெண்ட் செய்திருக்கிறது.
மிரட்டும் பந்துவீச்சாளர்கள்
முதலில் பேட் செய்த இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்தது. 161 ரன்களை சேஸிங் செய்ய புறப்பட்ட ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் மட்டுமே சேர்த்து 6 ரன்னில் தோல்வி அடைந்தது.
இந்த போட்டியின் வெற்றிக்கு உரித்தானவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். அதிலும் தொடக்கத்தில் டிராவிஸ் ஹெட் வெறி பிடித்தவர் போல் ஷாட்களை அடித்து ரன்களைக் குவித்தபோது அதற்கு கடிவாளம் போட்டு, பெவிலியனுக்கு அனுப்பியது சுழற்பந்துவீச்சாளர்கள்தான்.
பிஷ்னோய் தொடர் நாயகன்
சுழற்பந்துவீச்சாளர்கள் ரவி பிஷ்னோய், அக்ஸர் படேல் பந்துவீச வந்தபின், ஆஸ்திரேலிய ரன்ரேட் படிப்படியாகச் சரிந்து, வெற்றிக்கான தேவைப்படும் ரன்ரேட் அதிகரித்து நெருக்கடியில் சிக்கியது.
சுழற்பந்துவீச்சுக்கு பலவீனமாக இருக்கும் டிராவிஸ் ஹெட்டை ஏன் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நீண்டநேரம் நங்கூரமிட வைத்தது இந்திய அணி என்பது புரியவில்லை. இந்த தொடரில் டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்தது அனைத்தும் ரவி பிஸ்னாயின் சுழற்பந்துவீச்சில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொடரிலும் அக்ஸர் படேல், பிஸ்னோய் இருவரும் சிறப்பாகப் பந்துவீசினர். அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை எதிர்கொள்ள இருக்கும் நிலையில் பிஷ்னோய் சிறந்த லெக் ஸ்பின்னராகவும், ஆல்ரவுண்டராக அக்ஸர் படேலையும் உருவாக்க இந்திய அணிக்கு போதுமான அவகாசம் இருக்கிறது.
இந்தப் போட்டியிலும் 31 ரன்கள் சேர்த்து, 4 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்திய அக்ஸர் படேல் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தொடர் முழுவதும் பந்துவீச வந்தவுடன் ஆஸ்திரேலிய ரன்ரேட்டை இழுத்துப் பிடித்து, விக்கெட்டுகளை இக்கட்டான நேரத்தில் வீழ்த்திக் கொடுத்து மொத்தம் 9 விக்கெட்டுகளைச் சாய்த்த ரவி பிஷ்னோய் தொடர் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மோசமாகப் பந்துவீசிய அர்ஷ்தீப் சிங்
வேகப்பந்துவீச்சில் இந்திய அணி முகேஷ் குமார், அர்ஷ்தீப் சிங் இருவரையும் அடுத்த ஆண்டு உலகக் கோப்பைக்கு தயார் செய்ய முயல்கிறது. ஆனால், அர்ஷ்தீப் சிங்கின் பந்துவீச்சு ஐபிஎல் தொடரில் இருந்த துல்லியம், லெங்த், ஸ்விங் போன்றவை இந்திய அணிக்குள் வந்தபின் காணப்படவில்லை. ஐபிஎல் தொடரில் ஆடும் ஒவ்வொரு இந்திய வீரரும், இந்திய அணிக்குள் வருவதுதான் இலக்காக வைத்து ஆடிவிட்டு வந்தபின் ஃபார்மை இழந்துவிடுகிறார்கள் என்ற விமர்சனம் உண்டு.
இந்த தொடர் முழுவதுமே அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சு சிறப்பாக அமையவில்லை. சிறந்த பயிற்சியாளரிடம் அர்ஷ்தீப் சிங் தீவிரமாகப் பயிற்சி எடுத்தால்தான் பந்துவீச்சில் உள்ள தவறுகளைத் திருத்த முடியும். இல்லாவிட்டால் வரும் ஐபிஎல் தொடர் கூட அர்ஷ்தீப் சிங் சார்ந்திருக்கும் அணிக்கு சிக்கலாகிவிடும்.
'குற்றவாளி போல எண்ணினேன்'
இந்தப் போட்டியின் வெற்றிக்குப்பின் அர்ஷ்தீப் சிங் அளித்த பேட்டியிலும் தனது பந்துவீச்சு மோசமாக இருந்தது என்பதை ஒப்புக்கொண்டார். அவர் கூறுகையில் "நான்தான் போட்டியின் பெரிய பங்காக இருக்கப் போகிறேன் என்று நினைத்தேன். ஆனால் ஏற்கெனவே 3 ஓவர்கள் வீசி 37 ரன்கள்வரை கொடுத்து குற்றவாளிபோல் ஆகிவிட்டேன்.
ஆனால் இறைவன் எனக்கு கடைசி வாய்ப்பாக கடைசி ஓவரை வழங்கினார், என் மீது நம்பிக்கைவைத்து பந்துவீசினேன், வெற்றிக்கு துணையாகினேன். கடவுளுக்கும், என் மீது நம்பிக்கை வைத்த கேப்டன், சக வீரர்கள் நிர்வாகத்துக்கும் நன்றி.
கடைசி ஓவரை வீச சூர்யகுமார் என்னை அழைத்ததும் நான் தயங்கினேன். கவலைப்படாதீர்கள் நடப்பது நடந்தே தீரும் என்று நம்பிக்கையளித்தார். இந்திய அணி பேட்டர்களும் 160 ரன்கள் சேர்த்து பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவினர்" எனத் தெரிவித்தார்.
முகேஷ் குமார் 'வேகம்'
முகேஷ் குமார் இந்தத் தொடரில் ஓரளவுக்கு பந்துவீசினார் என்றுதான் கூற முடியும். முகேஷ் குமார் பந்துவீச்சிலும் துல்லியத்தன்மை, லைன் லென்த் ஆகியவை இன்னும் நிலைத்தன்மைக்குள் வரவில்லை. அர்ஷ்தீப் சிங்கோடு ஒப்பிடும்போது முகேஷ் குமார் பந்துவீச்சு ஓரளவுக்கு சிறப்பாக இருந்தது.
மற்ற வகையில் தீபக் சஹர், ஆவேஷ் கான் ஆகியோர் ஒருசில போட்டிகளில் பந்துவீசினாலும் அவர்களின் திறமை என்பது ஐபிஎல்வரை மட்டும்தான். சர்வதேச போட்டி என்று வரும்போது, அவர்களால் நெருக்கடிகளைச் சமாளித்து ஏற்றார்போல் பந்துவீசவில்லை. ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்ற தீபக் சஹர் ரன்களை வாரி வழங்கியது அவர் சர்வதேச போட்டிகளுக்கு இன்னும் தகுதியாகவில்லை என்பதையே காட்டியது.
அருமையான கண்டுபிடிப்பு 'ஜெய்ஸ்வால்'
பேட்டிங்கைப் பொறுத்தவரை கெய்க்வாட்டைவிட, ஜெய்ஸ்வால் தொடக்க ஆட்டக்காரர்களுக்கு அருமையான கண்டுபிடிப்பாகும். ஜெய்ஸ்வாலுக்கு தொடர்ந்து டி20 போட்டிகளில் வாய்ப்பளிப்பதன் மூலம் நிச்சயமாக டி20 உலகக் கோப்பைத் தொடரில் அனைத்து அணிகளுக்கும் சிம்மசொப்னமாக மாறுவார்.
இந்தத் தொடரில் ஜெய்ஸ்வால் செய்த தவறு என்னவென்றால், அவரால் பவர்ப்ளே ஓவருக்குப்பின் தனது ஆட்டத்தை நீட்டிக்க தவறிவிட்டார் என்பதுதான். அதிரடியாக ஆடி ரன்களைக் குவிக்கும் ஜெய்ஸ்வால், தனது இன்னிங்ஸையும் நீட்டிக்க முயன்றால் அணிக்கு பெரிய ஸ்கோராக வந்து சேரும்.
சூர்யகுமாருக்கு தெரிந்தது ரோஹித்துக்கு தெரியவில்லையா?
ஆனால், டிராவிஸ் ஹெட் சுழற்பந்துவீச்சுக்கு இவ்வளவு பயப்படுவார், விளையாடத் தெரியாதவர் என்பதை சூர்யகுமார் கண்டுபிடித்த அளவுக்கு ரோஹித் சர்மா கண்டுபிடிக்காதது ஏன் எனத தெரியவில்லை.
டிராவிஸ் ஹெட் ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க ரவி பிஸ்னாய் பந்துவீச சூர்யகுமார் அழைத்தார். ரவி பிஸ்னாய் பந்துவீச வந்தவுடன் சுழற்பந்துவீச்சை சமாளித்த ஆடமுடியாமல் கிளீன் போல்டாகி டிராவிஸ் ஹெட் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றவகையில் நடுவரிசை பேட்டர்கள் யாரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. எளிதான இலக்குதான் என்றாலும்,சுழற்பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாட பேட்டர்கள் சிரமப்பட்டனர்.
கடைசி நேரத்தில் ஆஸ்திரேலிய அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல கேப்டன் மேத்யூ வேட் கடினமாக முயன்றார். ஆனால், கடைசி ஓவரில் 10 ரன்கள் வெற்றிக்குத் தேவைப்பட்டநிலையில், பெரிய ஷாட்டுக்குமுயன்று 22 ரன்களில் ஆட்டமிழந்தார். மேத்யூ வேட் வெளியேறியதும் ஆஸ்திரேலிய தோல்வி உறுதியானது.