இன்றைய சூழ்நிலையில் வங்கிகள் அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறி உள்ளது. வீட்டு வாடகை முதல் மளிகை பொருட்கள் வாங்குவது வரை அனைத்திற்கும் ஆன்லைன் சேவை வசதி வந்துள்ளது.
இருந்த இடத்தில் இருந்தே யாருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பி கொள்ள முடியும். ஒவ்வொருவரும் குறைந்தது இரண்டு வங்கிகளில் கணக்குகளை வைத்து இருப்போம். அதில் பல வகையான வங்கிக் கணக்குகள் உள்ளன, அதில் ஒன்று சேமிப்பு கணக்கு. இதுவே பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் வங்கி கணக்கு ஆகும். பொதுவாக மக்கள் தங்கள் வருமானத்தை சேமிப்பு கணக்குகளில் தான் வைத்திருப்பார்கள். ஒரு நபர் எத்தனை சேமிப்பு கணக்குகளை வேண்டுமானாலும் திறந்து கொள்ளலாம். இந்த வகை கணக்கில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் வைத்து இருக்க கூடாது என்ற நிபந்தனை இல்லை.
வட்டிக்கும் வரி செலுத்த வேண்டும்
ஐடிஆர் தாக்கல் செய்யும் போது, வருமான வரி செலுத்தும் ஒவ்வொரு நபரும் தனது சேமிப்புக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் பற்றிய தகவலையும் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். உங்கள் சேமிப்பு கணக்கு வைப்புத்தொகையிலிருந்து நீங்கள் பெறும் வட்டி உங்கள் வருமானத்தில் சேர்க்கப்படும் மற்றும் வட்டிக்கு வருமான வரி விதிக்கப்படும். வங்கி வட்டியில் 10 சதவீத டிடிஎஸ் கழிக்கிறது. சேமிப்புக் கணக்கிலிருந்து கிடைக்கும் வட்டிக்கு நீங்கள் வரி சலுகையைப் பெற முடியும். வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80TTA இன் படி, அனைத்து நபர்களும் அதிகபட்சம் ரூ.10,000 வரை வரிவிலக்கு பெறலாம்.
சேமிப்புக் கணக்கில் 10,000 ரூபாய்க்கும் குறைவான வட்டியாக இருந்தால், அதற்கு வரி செலுத்த வேண்டியதில்லை. 60 வயதுக்கு மேற்பட்ட கணக்கு வைத்திருப்பவர்கள் ரூ.50 ஆயிரம் வரை வட்டிக்கு வரி செலுத்த வேண்டியதில்லை போன்ற வசதிகளும் உள்ளது. ஒரு நபரின் ஆண்டு வருமானம், சேமிப்புக் கணக்கிலிருந்து பெறப்பட்ட வட்டியைச் சேர்த்த பிறகும், வரிப் பொறுப்பாக மாறுவதற்குப் போதுமானதாக இல்லை என்றால், படிவம் 15G ஐச் சமர்ப்பிப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் வங்கியால் கழிக்கப்பட்ட TDS-ஐத் திரும்பப் பெறலாம்.