காவிரி நீரை முறையாக வழங்காத கர்நாடகா; மேகேதாட்டு அணை விவகாரத்தில் தீவிரம் - தமிழகம் எடுத்த நடவடிக்கை என்ன?

தென்மேற்குப் பருவமழை தீவிரமாக பெய்யாத நிலையில், காவிரிக்கு நீர் வரத்து குறைந்திருப்பது தமிழ்நாட்டின் டெல்டா பகுதி விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. இதற்கு தீர்வு என்ன?

தமிழ்நாட்டில் உள்ள காவிரி டெல்டா பகுதிகளின் விவசாயத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணையில் நீர் 100 அடிக்கு மேல் இருந்தால், ஜூன் 12ஆம் தேதியன்று அணை விவசாயத்திற்காகத் திறக்கப்படும்.

அதன்படி இந்த ஆண்டும் மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதியன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. முதற்கட்டமாக வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு, படிப்படியாக திறக்கப்படும் நீரின் அளவு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. மேட்டூர் அணை கட்டப்பட்ட பிறகு, கடந்த 90 ஆண்டுகளில் 19வது தடவையாக குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ஆம் தேதி அணை திறக்கப்பட்டது.

ஆனால் தற்போது அணைக்கு நீர்வரத்து குறைவாக இருப்பதால் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 11,170 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீரின் வரத்து பெரிதாக இல்லாத நிலையில், ஜூன் 28ஆம் தேதி 92.40 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து தற்போது 86 அடியை நெருங்கியுள்ளது.

மேட்டூர் அணைக்கான நீர் வரத்து கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி, ஹரங்கி ஆகிய அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரையே சாரந்துள்ளது. இந்த ஆண்டு பருவமழை இன்னும் தீவிரமடையாத நிலையில், தற்போது அந்த அணைகளிலும் நீர் இருப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.

124.8 அடி உயரமுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் 78.22 அடி அளவுக்கே நீர் உள்ளது. கடந்த ஆண்டு இதே தேதியில் 108.82 அடி அளவுக்கு நீர் மட்டம் இருந்தது. அதேபோல, 129 அடி உயரம் கொண்ட ஹரங்கி அணையில் 91.62 அடி உயரத்திற்கே நீர் இருக்கிறது. கடந்த ஆண்டு இதே தேதியில் 127.38 அடி அளவுக்கு நீர் இருந்தது. 65 அடி உயரம் கொண்ட கபினி அணையைப் பொறுத்தவரை, தற்போது நீர் இருப்பு 33.26 அடியாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டு, 48.52 அடியாக நீர்மட்டம் இருந்தது.

இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு சுமார் 160 கன அடி என்ற அளவில்தான் இருந்துவருகிறது. இதன் காரணமாக, குறுவை சாகுபடியை முழுமையாக மேற்கொள்ள முடியுமா என்ற கவலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

 

காவிரி நீரை முறையாக வழங்காத கர்நாடகம்

இதற்கிடையில், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி கடந்த ஜூன் மாதம் வழங்க வேண்டிய நீரை கர்நாடகம் வழங்கவில்லை. இதையடுத்து ஒவ்வொரு மாதமும் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய தண்ணீரைத் தரும்படி, கர்நாடகாவிற்கு உத்தரவிடுமாறு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவரிடம் கடந்த ஜூன் 16ஆம் தேதியன்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

ஜூன் மாதத்தில் கர்நாடகத்தில் இருந்து கிடைக்க வேண்டிய நீர், வழங்கப்படாதது குறித்து ஜூன் 30ஆம் தேதியன்று நடைபெற்ற காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் கவனத்திற்கு தமிழ்நாடு அரசு எடுத்துச் சென்றுள்ளது. ஜூலை மாதத்தில் தர வேண்டிய நீரையாவது முறைப்படி தர வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசு கோரியுள்ளது.

மேகேதாட்டு அணை- தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு

இந்த நிலையில் கர்நாடக அரசு மேகேதாட்டு அணை திட்டத்தை செயல்படுத்த முனைவதுதான் இந்தப் பிரச்னையின் தீவிரத்தை மேலும் அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு புதிதாகப் பதவியேற்றதிலிருந்து மேகேதாட்டு அணை திட்டத்தைச் செயல்படுத்துவதில் தீவிரம் காட்டிவருகிறது. குறிப்பாக அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து பேசிவருவதோடு, மேகேதாட்டுவில் அணையைக் கட்டியே தீருவோம் என்றும் கூறிவருகிறார். மே 30ஆம் தேதியன்று நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில் மேகேதாட்டு அணைத் திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்த வேண்டுமென்று கூறினார்.

மேலும், ஜூன் 20ஆம் தேதியன்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு டி.கே. சிவக்குமார் எழுதியுள்ள கடிதத்தில், மேகேதாட்டு அணைத் திட்டத்திற்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டுமென்றும் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு இரட்டை வேடம் போடுவதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறார். ஜூன் 30ஆம் தேதியன்று கஜேந்திர சிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்தும், இது குறித்து வலியுறுத்தியிருக்கிறார்.


நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் என்ன?

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்துள்ள தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், "கர்நாடக அரசு உத்தேசித்துள்ள மேகதாது அணை திட்டம் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு முரணானது. இத்திட்டம் குறித்து, எற்கனவே முதலமைச்சர், பிரதமரை நேரில் சந்தித்தபோது மேகதாது அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியுள்ளார். நானும், மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்கும்போதெல்லாம் இக்கருத்தை வலியுறுத்தியுள்ளேன்.

மத்திய நீர்வளத்துறை அமைச்சரும் தமிழ்நாட்டின் இசைவில்லாமல் மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படாது எனக் கூறியுள்ளார். மேலும், தமிழ்நாடு அரசு இப்பிரச்னை குறித்து தொடர்ந்துள்ள வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. தவிர, மேகதாது அணை திட்டம் குறித்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்க வேண்டுமென கர்நாடக அரசு வலியுறுத்திய போதெல்லாம் தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

இதனால், ஆணையத்தின் கடந்த மூன்று கூட்டங்களில் இந்த விவகாரம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இத்திட்டம் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது, வலுவான வாதங்களை முன் வைத்து கர்நாடகாவின் அணை கட்டும் முயற்சிகளை தமிழ்நாடு அரசு முறியடிக்கும்" என்று கூறியிருக்கிறார்.

இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து காவிரி மேலாண்மை வாரியத் தலைவரைச் சந்தித்துப் பேசுவதற்காக தில்லி செல்லும் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், ` ஜூன் மாதத்தில் கர்நாடகத்தில் இருந்து 9.19 டிஎம்சி நீர் வந்திருக்க வேண்டும். மாறாக, 2.833 டி.எம்.சி நீர் மட்டுமே வந்திருப்பதாகவும் இதனால் ஜூன் மாதத்தில் மட்டும் 6.3 டி.எம்.சி நீர் குறைவாக வழங்கப்பட்டிருக்கிறது` என குற்றம்சாட்டியுள்ளார்.


விவசாயிகள் அச்சம்

தற்போது மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுவந்தாலும், கர்நாடக அணைகளில் நீர் இல்லாதது, மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து மிகக் குறைவாக இருப்பது, அணையின் நீர்மட்டம் மிகக் குறைவாக இருப்பது ஆகியவற்றால் டெல்டா பகுதி விவசாயிகளிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.

"இந்த ஆண்டு மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி திறக்கப்பட்டதால், அதனை நம்பி திருவாரூர் மாவட்டம் முழுக்க சுமார் 80,000 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. தற்போது 10,000 முதல் 12 ஆயிரம் கன அடி வரை நீர் திறக்கப்படுகிறது. முறை வைத்து மூன்று நாட்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு ஆற்றிலும் நீர் திறக்கப்படுகிறது. கடந்த ஆண்டு, திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருந்ததால், சீக்கிரமே கடைமடைப் பகுதிக்கு நீர் வந்துவிட்டது.

இந்த ஆண்டு இன்னமும் முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளுக்கு நீர் வரவில்லை. கர்நாடகத்திலிருந்து உரிய நேரத்தில் நீர் திறக்கப்படவில்லையென்றால், விவசாயிகளின் நிலை கேள்விக் குறியாகிவிடும். கர்நாடக அரசுடன் தமிழக அரசு பேசி, உரிய நீரைப் பெற வேண்டும்" என்கிறார் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கத்தின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் காணூர் அழகர்ராஜ்.


கடைமடை விவசாயிகள் பாதிப்பு

மேட்டூர் அணையில் நீர் திறப்பு குறைவது நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்ட கடைமடை விவசாயிகளைக் கடுமையாகப் பாதித்திருப்பதாகச் சொல்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பெ. சண்முகம்.

"குறுவைச் சாகுபடியில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் ஒருபுறமிருக்க, நாகப்பட்டனம் போன்ற மாவட்டங்களில் பல விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். பொதுவாக இந்த காலகட்டத்தில் பெய்யும் மழையை நம்பியும் காவிரி நீரை நம்பியும்தான் இதனைச் செய்தார்கள். ஆனால், மழையும் பெய்யவில்லை. காவிரியிலும் போதுமான தண்ணீர் வரவில்லை. ஆகவே, விதைக்கப்பட்ட நெல்லை பறவைகள்தான் தின்றுகொண்டிருக்கின்றன.

குறுவைச் சாகுபடியில் ஈடுபட்டவர்களுக்கும்கூட, போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை. அணையிலிருந்து 10,000 முதல் 12 ஆயிரம் கன அடிவரைதான் நீர் திறக்கப்படுவதால், இப்போதுவரை கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை. விநாடிக்கு 18,000 கன அடி வரை நீர் திறக்கப்பட்டால்தான் எல்லோருக்கும் ஒரே நேரத்தில் நீர் கிடைக்கும். இப்போது குறைவாக நீர் கிடைப்பதால் முறை வைத்துத்தான் வாய்க்கால்களை திறக்கிறார்கள்.

மேலும், இந்த ஆண்டு பருவமழை சரியாகப் பெய்யாது என்கிறார்கள். இதனை முன்கூட்டியே கணித்து, அணையை ஜூன் 12ஆம் தேதிக்குப் பதிலாகச் சற்றுத் தாமதித்துத் திறந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. தற்போது கர்நாடக அணைகளிலும் தண்ணீர் இல்லை என்பதால், அவர்களிடம் எதிர்பார்த்தாலும் கிடைக்காது. இந்தச் சூழலில், நேரடி விதைப்பில் ஈடுபட்டு விதை நெல்லை இழந்த விவசாயிகளுக்கு அரசு தகுந்த உதவிகளைச் செய்ய வேண்டும்" என்கிறார் பெ. சண்முகம்.

கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்திருப்பதாகச் சொல்லப்பட்டாலும் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கவில்லை என்பதும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

Previous Post Next Post

نموذج الاتصال