நாளை மறுநாள் விண்ணுக்கு ஏவப்பட இருக்கும் 'ஆதித்யா- எல்1' விண்கலம் சூரியனை எந்த வகையில் ஆய்வு செய்யும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் பல்வேறு விரிவான தகவல்களை வழங்கியுள்ளனர்.
அதன் விவரங்களை பார்க்கலாம்.
விண்வெளி துறையில் பல்வேறு வியக்கத்தக்க சாதனைகளை இந்தியா செய்து வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக நிலவில் சாஃப்ட் லேண்டிங் செய்த சாதனையும் இந்தியா படைத்துள்ளது. நிலவில் இதுவரை எந்த ஒரு நாடும் ஆய்வு செய்யாத தென் துருவத்தில் இந்தியாவின் சந்திரயான் விண்கலம் தற்போது ஆய்வுகளை செய்து வருகிறது. நிலவில் ஆக்சிஜன், சல்பர் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதையும் சந்திரயான் விண்கலம் கண்டுபிடித்தது.
தொடர்ந்து பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஆய்வுகளை செய்து வருகிறது. இந்த ஆய்வுகள் ஒருபக்கம் நடந்து கொண்டு இருக்க இஸ்ரோ, அடுத்த கட்டமாக சூரியனை ஆய்வு செய்ய திட்டமிட்டது. இதற்காக 'ஆதித்யா- எல்1' என்ற விண்கலத்தை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரும் சனிக்கிழமை விண்ணில் செலுத்த உள்ளது. காலை 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் இந்த விண்கலம் விண்ணில் ஏவப்படுகிறது.
இதற்கான கவுண்டவுன் நாளை தொடங்க உள்ளது. விண்ணில் ஏவப்படும் 'ஆதித்யா-எல் -1' விண்கலத்தின் செயல்பாடுகள் என்ன? என்பது குறித்தும் சூரியனில் எந்த மாதிரியான ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறது என்பது பற்றியும் இஸ்ரோ விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர். இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-சூரியனை ஆய்வு செய்ய செல்லும் ஆதித்யா எல் 1 விண்கலத்தில் சூரியனின் கொரோனா, குரோமாஸ்பியர், போட்டோஸ்பியர் மற்றும் சூரியக் காற்று ஆகியவற்றை செய்வதற்காக கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுகளுக்காக மொத்தம் 7 கருவிகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்தக் கருவிகள் மூலம் வெப்பமாக்கல் அவற்றின் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை புரிந்து கொள்ள முடியும். மேலும் கருவியில் உள்ள நான்கு ரிமோட் சென்சிங் கருவிகள் சூரியனின் வளிமண்டலத்தை ஒளியின் வெவ்வேறு அலை நீளங்களில் படம் பிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவற்றில் புற ஊதா மற்றும் எக்ஸ் கதிர்கள் உள்ளிட்டவையும் அடங்கும்" இப்படி பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது. சந்திரயான் விண்கலம் மூலம் நிலவில் தண்ணீர் இருப்பதை உலகத்திற்கு சொன்ன இஸ்ரோ, சூரியனை ஆய்வு செய்ய இருக்கும் ஆதித்யா எல் -1 மூலமும் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து உலகத்திற்கு சொல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.